/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரத்தடியில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்
/
மரத்தடியில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 28, 2025 01:09 AM
மரத்தடியில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்
கரூர்:கரூர் அருகில், வையாபுரிக்கவுண்டனுார் தொடக்கப் பள்ளியில் ஓட்டு கட்டடம் சேதமடைந்ததால், மாணவ, மாணவியர் மரத்தடியில் படித்து வருகின்றனர்.
கரூர், தான்தோன்றி மலை ஊராட்சி ஒன்றியத்தில், வையாபுரிக்கவுண்டனுாரில், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம், 20 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
ஓட்டு கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டடம் மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல்
ஏற்பட்டும், எப்போது விழுமோ என்ற அபாயத்தில் காணப்படுகிறது. புத்தக பைகளை சமையலறை கட்டடத்தில் வைத்து விட்டு, மாணவ, மாணவியர் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
பள்ளி கட்டடத்தை சரி செய்ய கோரி, பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது கோடை வெயில் காரணமாக மாணவ, மாணவியர் வெளியில் அமர முடியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள பள்ளி ஓட்டு கட்டடம்தான், தேர்தலின் போது ஓட்டுச்சாவடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கவுரி கூறுகையில், ''வையாபுரிக்கவுண்டனுார் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. பழைய கட்டடத்தை இடித்து கட்ட வேண்டி இருப்பதால், தாமதம் ஏற்பட்டு உள்ளது. கோடை விடுமுறையின் போது, புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி விடும்,'' என்றார்.