/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரளி மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பரளி மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஏப் 01, 2025 01:26 AM
பரளி மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, இராஜேந்திரம் பஞ்., பரளி தேவேந்திர குல தெருவில் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன், மலையாளி, மதுரை வீரன், மகாகாளியம்மன், மல்லாண்டவர், வழி விடு முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த, 29 காலை குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம், புனித நீர் அடங்கிய கும்பத்தினை யாக வேள்வியில் வைத்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பத்தை, சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., மாணிக்கம், குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.