/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது?
/
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது?
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது?
நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது?
ADDED : ஆக 07, 2024 02:04 AM
கரூர், கரூர் ஆத்துப்பாளையம் அணை நிரம்ப, ஒரு அடி மட்டுமே இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கரூர் மாவட்டம் கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன் மூலம் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னுார், அத்திப்பாளையம், குப்பம், புன்னம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.ஆத்துப்பாளையம் அணையில் இருந்து கடந்த, 2000ம் ஆண்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிகளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் ஆத்துப்பாளையம் அணைக்கு, 3,000 டி.டி.எஸ்., உப்பு தன்மை கொண்ட சாயக்கழிவு நீர் வந்து சேர்ந்தது. அணை நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டதால், அணையில் தண்ணீர் திறந்து விடுவது கடந்த, 2004-ம் ஆண்டுக்குப் பின் நிறுத்தப்பட்டது.
மழை காலத்தில், நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 ஆண்டுகளுக்கு பின், 2019ல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஆத்துப்பாளையம் அணையில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மாவட்டத்தின் கடைசி எல்லையான பந்தல்பாளையம் வரை வந்து அங்குள்ள குளத்தை நிரப்பியது. தற்போது ஆத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு, 94 கன அடிநீர் வருகிறது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.74 அடியாக நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, கார்வழி விவசாயிகள் கூறியதாவது: தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்கிறது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. 235 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவை கொண்ட ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் தற்போது, 216.15 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மழை நீர் அதிகம் வருவதால் நொய்யலில் இருந்து வரும் தண்ணீரின் உப்புத்தன்மை, 586 டி.டி.எஸ்., மட்டுமே உள்ளது. அணையில் திறக்கப்படும் தண்ணீரால் பாசன நிலங்களுக்கோ, கால்நடைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே தேவைப்படுகிறது. வாய்க்காலில் தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.நொய்யல் வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் சதீஸ் கூறுகையில்,'' பாசனத்திற்கு அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், தண்ணீர் திறக்க அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என்றார்.