/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
/
அய்யர்மலை கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
அய்யர்மலை கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
அய்யர்மலை கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ADDED : ஏப் 23, 2024 04:13 AM
குளித்தலை: அய்யர்மலையில், சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக ரத்தின
கிரீஸ்வரர் கோவிலில், சித்திரை திரு
விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அப்பர், திருவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பாடப்பட்ட, 274 சிவாலயங்களில், 64வது தேவார சிவஸ்தலமாகும்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம், கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்தில், 1,017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும் சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உற்சவர் அம்மாளுடன் சிறப்பு அலங்காரத்தில் நந்தி, கைலாசம், ரிஷபம், காமதேனு, சிம்மம், சேஷம், பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா கண்டார். ஏப்., 18ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார் குழலி அம்மனுக்கு பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
சுவாமி உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். நேற்று துவங்கிய தேரோட்டம், அய்யர்மலை நான்கு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையை, பல்வேறு கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று நாட்கள் சுற்றி வந்து வரும் ஏப்., 24ம் தேதி மாலை நிலைக்கு வந்தடையும். கோவில் குடிபாட்டுக்காரர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை துாவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில் செயல் அலுவலர் அமர்நாதன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கரூர் முருக கணபதி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

