/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு
/
கரூரில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு
ADDED : மே 17, 2024 02:22 AM
கரூர்: கரூர்-ஈரோடு சாலையில், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது.
கரூர் மாநகராட்சி, 1 வது வார்டு காயத்ரி நகர், வீனஸ் கார்னர், கே.பி., நகர் ஆகிய பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஈரோடு சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக செல்கிறது. இங்கு, வடிகால் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 1வது வார்டு, சின்ன ஆண்டாங்கோவில் பஞ்., ஆகிய குடியிருப்புகளின் கழிவு நீர், கரூர்-ஈரோடு சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக வெளியேறி வருகிறது. கே.பி., நகர் 1, 2 வது சந்திப்பில் உள்ள சாலையில், மழைநீர் வடிகால் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி விட்டனர். சாலையில் மற்றொரு புறம் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த போது, மழைநீர் வடிகால் மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது என்கின்றனர். மாநில நெடுஞ்சாலை அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும், ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளனர். மழை பெய்யும் போதும், வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. திருமண மண்டபத்தில் திருமணம் போன்ற விழாக்கள் நடக்கும் போது, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான நாட்களில் துர்நாற்றம் வீசுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

