ADDED : ஆக 06, 2024 01:46 AM
கரூர், கரூர் அருகே, அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து கணபதிபாளையம் பகுதியில், 50 க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மழை பெய்யும் போது, அந்த பகுதியில் மழைநீருடன், வீடுகளில் இருந்து கழிவு நீர் தேங்குகிறது. தார்ச்சாலை வசதி இல்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தார் சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்சாலை போட, கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீட்டை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது. திருச்சி பிரதான சாலையில் இருந்து, கணபதிபாளையத்துக்கு எளிதாக நடந்து செல்ல முடியவில்லை. இதனால், திருச்சி பிரதான சாலையில் இருந்து, கணபதிபாளையத்துக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை, செய்து தரும் வகையில், புலியூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.