/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
/
வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 09, 2024 07:33 AM
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 47 விநாயகர் சிலைகள் நேற்று இரவு, காவிரியாற்றில் கரைக்கப்பட்டது.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத மக்கள் கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், நேற்று முன்தினம், 47 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மாலை முதல், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கரூர், 80 அடி சாலையில் இருந்து, 20 விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்து சாலை, அரசு காலனி வழியாக, விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில், நேற்று மாலை கரைக்கப்பட்டது. அதில், கரூர் மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதைதொடர்ந்து, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 27 சிலைகள் கரூர், 80 அடி சாலைக்கு மாநகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில் கொண்டு வரப்பட்டது. பின், ஊர்வலத்தை மாநில ஹிந்து முன்னணி நிர்வாக குழு உறுப்பினர் சுப்பையா தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில், நேற்று இரவு கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி, ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார், செந்துார்பாண்டியன், சுமதி ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் கரூர், 80 அடி சாலை முதல் காவிரியாறு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.