/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாகுபடி அதிகரிப்பால் நிலக்கடலை கூவி கூவி விற்பனை
/
சாகுபடி அதிகரிப்பால் நிலக்கடலை கூவி கூவி விற்பனை
ADDED : ஜூலை 01, 2024 03:32 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை தொடங்கிய நிலையில், கரூரில் நிலக்கடலை கூவி கூவி விற்கப்படுகிறது.
தமிழகத்தில், நிலக்கடலை மழையை நம்பி, மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரூர் மாவட்டத்தில், பரவலாக கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள் நிலக்கடலையை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். கரூர், தான்தோன்றிமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய யூனியன் பகுதிகளில், 15,000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக, நிலக்கடலையில் எண்ணெய் தயாரிக்க ஆலை ஏஜென்ட்கள், விவசாயிகளை நேரிடையாக சந்தித்து கொள்முதல் செய்வார். நடப்பாண்டில் மாநிலம் முழுதும், நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால், விவசாயிகளே நேரிடையாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனால், கரூர் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், கிராம சந்தைகள் மற்றும் தெருவோர பகுதிகளில், மண் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது: தமிழகம் முழுதும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் ஆலைக்கான ஏஜென்ட்கள் நிலக்கடலை கேட்டு அதிகம் பேர் வரவில்லை. ஒரு சிலர் வந்தாலும், ஒரு படி நிலக்கடலையை, 15 ரூபாய் முதல், 18 ரூபாய் வரை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். இதனால், பொதுமக்களிடம் நேரிடையாக விற்பனை செய்யும் போது ஒரு படி, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை கிடைக்கிறது. அதிகளவில் நிலம் வைத்துள்ளவர்களிடம், எண்ணெய் ஆலை ஏஜென்ட்கள் நிலக்கடலையை கொள்முதல் செய்து கொள்கின்றனர். இதனால், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறிய விவசாயிகள், மக்களிடம் நேரிடையாக நிலக்கடலையை விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.