/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பு: முருங்கை விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பு: முருங்கை விலை சரிவு
ADDED : செப் 09, 2024 07:32 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்தாண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை கரூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவில் பெய்ததால், மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். வழக்கமாக ஆண்டுதோறும் ஆக., முதல் நவ., வரை முருங்கைக்காய் சீசன் காலமாகும். இதனால், கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள, மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து, கடந்த ஒரு வார காலமாக அதிகரித்துள்ளது. இதனால், முருங்கைக்காய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.இதுகுறித்து, முருங்கை வியாபாரிகள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டாரத்தில், செடி முருங்கை, கொடி முருங்கை என, இரண்டு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது, சீசன் காலத்தையொட்டி முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. செடி முருங்கை, கொடி முருங்கை இரண்டு அடி முதல், மூன்று அடி வரை வளரும். இந்த ரகங்கள், கடந்த மார்ச் மாதம், ஒரு கிலோ கொண்ட ஒரு கட்டு, 120 ரூபாய் வரை விற்றது.
ஆனால், தற்போது செடி முருங்கைக்காய், கொடி முருங்கைக்காய் ஆகியவை ஒரு கிலோ, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விற்கிறது. வரும், 17ல் புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷம் குறைவாக இருக்கும். இந்நிலையில், வரத்து அதிகரிப்பாலும், சுப விசேஷங்கள் இல்லாததாலும், முருங்கைக்காய்க்கு மேலும் விலை குறைய வாய்ப்புண்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.