ADDED : ஆக 27, 2024 03:13 AM
நாமக்கல்: ராசிபுரம் - ஆத்துார் சாலையில், சந்தான கோபால கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நேற்று காலை, சிறப்பு பூஜை நடந்தது. அதில், பால், தயிர், நெய், வெண்ணெய், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க காப்பு அலங்காரத்தில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், ராதை - கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம், மகாலட்சுமி சுவாமிக்கு தங்க காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில், கிருஷ்ணர், பாமா, ருக்மணிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள கிருஷ்ண சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணர் பூஜை, மதியம், 2:00 மணிக்கு உறியடி, மாலை, 5:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் விழா நடந்தது. மோகனுார் அடுத்த வளையப்பட்டி பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோவிலில், வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலுக்கு வந்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.