/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
/
ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED : ஆக 05, 2024 02:25 AM
கரூர், ஆடி அமாவாசையையொட்டி, வெள்ளப்பெருக்கு காரணமாக கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாசன வாய்க்கால் பகுதியில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தமிழகம் முழுதும் நேற்று, ஆடி அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதனால், கரூர் மாவட்டம் தளவாப்பாளையம், வாங்கல், நெரூர் அக்ரஹாரம், மாயனுார், குளித்தலை ஆகிய காவிரியாற்று பகுதிகளில் உள்ள பாசன வாய்க்காலில், முன்னோர்களுக்கு பொதுமக்கள், ஏராளமானோர் நேற்று தர்ப்பணம் செய்தனர். குறைவான அளவில் தண்ணீர் செல்லும் அமராவதி ஆற்றுப்பகுதிகளிலும், பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மேலும், ஆடி அமாவாசையையொட்டி, கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், காமாட்சியம்மன் கோவில், கற்பக விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில், வெண்ணைமலை, புகழூர், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில், நேற்று காலை, மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.