/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முக்கிய சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதால் அவதி போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
/
முக்கிய சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதால் அவதி போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முக்கிய சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதால் அவதி போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முக்கிய சாலையில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதால் அவதி போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ADDED : மே 31, 2024 03:32 AM
கரூர்: கரூர் மாநகராட்சி முக்கிய சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத், போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும், மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் நிர்ணயித்துள்ள, 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தவில்லை. அன்றாடம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கூட, 'பார்க்கிங்' வசதியே இல்லாமல் செயல்படுகின்றன. பெயரளவுக்கு வாகன நிறுத்தும் அளவுக்கு கீழ் தளத்தில் பார்க்கிங் வைத்துள்ளனர்.
கோவை, ஜவகர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானாவை ஒட்டியுள்ள பகுதியில், ஜவுளி, நகை, பேன்ஸி ஸ்டோர்கள், பேக்கரிகள் உள்ளன. இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த கடைகளில் பார்க்கிங் வசதியில்லாததால் சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவகர் பஜார் செல்லும் வலதுபுறம் சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன.
இதேபோல், ரவுண்டானாவில் இருந்து, கோவை செல்லும் சாலையிலும், சாலையோரத்தில் தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே சென்டர் மீடியன் மூலம் சாலை பிரிக்கப்பட்டதால், சாலை அகலம் குறைவாக உள்ளது. அதிலும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது. ரவுண்டானாவில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதி பல மணி நேரம் ஸ்தம்பித்து போகிறது. திங்கள் முதல் சனி வரை அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
சாலையில் வாகனங்கள் நிறுத்தும் போது தற்போது, எவ்வித கட்டணம் இல்லை என்பதால் பல மணி நேரம் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு, கடிவாளம் போடும் வகையில் சாலையில் பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் முறையை, சட்டத்துக்கு உட்பட்டு மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும். கோவையில் பார்க்கிங் பகுதி தவிர மற்ற இடங்களில் வாகனம் நிறுத்தினால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
அதே போல கரூரில் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, வாகனம் நிறுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.