ADDED : மார் 15, 2024 04:03 AM
கரூர்: ''லோக்சபா தேர்தலுக்காக வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கு முதற்கட்டமாக, 12 பறக்கும் படைகள் உள்பட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படவுள்ளது. அதே போன்று, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும், வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் முதற்கட்டமாக, 12 பறக்கும் படைகள், 12 நிலைகண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 4 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 4 வீடியோ பார்வையிடும் குழுக்களும், உதவிகணக்குக்குழுக்கள், ஊடகமையத்திற்கு ஊடகசான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இவ்வாறு, அவர், பேசினார்.
முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ.,கண்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையதுகாதர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீரீலேகா உள்பட பலர் பங்கேற்றனர்.

