ADDED : நவ 25, 2025 01:08 AM
கரூர்,: கரூர் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், 58-வது தேசிய நுாலக வார நிறைவு விழா நடந்தது.
கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
அரசு பள்ளி மாணவ, மாணவியர் பாடநுால்களை கடந்து, அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாசியுங்கள். வாசித்ததை யோசியுங்கள். யோசித்ததை செயல்படுத்துங்கள்.
இதுவே வெற்றிக்கான வழிமுறை. நுாலகம் என்பது நமது அறிவுக்கண்ணை திறக்கும் அறிவுசார் மையம். எளிய கிராமப்புற மாணவர்களுக்கு ஊர்புற, கிளை நுாலகங்கள் ஏற்படுத்தி தமிழக அரசு பல லட்சக்கணக்கான நூல்களை வழங்கி வருகிறது. நுாலகங்களுக்கு வரும் மாணவர்கள் படிக்கின்ற செய்தியினை குறிப்பெடுத்து, அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, மாதிரித்தேர்வுகளை திறம்பட எழுதி வெற்றிபெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

