/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு
/
குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு
குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு
குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 6 சாயப்பட்டறைகள் இடிப்பு
ADDED : டிச 27, 2024 07:30 AM
குமாரபாளையம்: அனுமதியின்றி இயங்கிய, 6 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள் உதவியுடன் இடித்து அகற்றினர்.
குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பெரும்பாலான சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்குவதுடன், அதிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல், சாக்கடை கால்வாய்கள் மூலம் காவிரி ஆற்றில் நேரடியாக கலக்க செய்கின்றன. இதனால் காவிரி ஆறு மாசடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல ஆண்டுகளாக சாயப்பட்டறைகளை ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கக்கூடிய சாயப்பட்டறைகளை இடித்து வருகின்றனர். பல சாய தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் பல இடங்களில் சாய தொழிற்சாலை மீண்டும் அனுமதியின்றி இயங்கி வருவதாக வந்த தகவல்படி, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் ஈரோடு மாவட்ட பறக்கும் படை மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், நேற்று திடீரென சாய பட்டறைகளை ஆய்வு செய்தனர். அப்போது, சுந்தரம் நகர், நடராஜா நகர், ஓடக்காடு, செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த, 6 சாயப்பட்டறைகளை கட்டட தொழிலாளர்கள் உதவியுடன் சம்பட்டியால் இடித்து அகற்றினர்.
இதுகுறித்து, சாயப்பட்டறை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: அனுமதி பெற்று இயங்கக்கூடிய சாயப்பட்டறைகள், இரவு நேரங்களில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வருகின்றன. அவர்களை கண்டிக்காமல், மனித உழைப்பால் செயல்படும் சிறு சாயப்பட்டறைகளை இடித்து வருகின்றனர். இது விசைத்தறி தொழிலை மட்டுமின்றி, சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.