ADDED : ஜூலை 15, 2026 05:52 AM
குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., சிவாயம் வடக்கு யூனியன் நடுநிலை பள்ளியில், 330-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று மதியம், மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி நடந்தது. அப்போது, உணவில் பல்லி ஒன்று விழுந்து கிடப்பதை, சத்துணவு பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, சமைத்த உணவுகளை அப்புறப்படுத்தினர். மேலும், பல்லி விழுந்தது தெரியாமல், ஆறு மாணவர்களுக்கு வழங்கிய உணவையும் பறிமுதல் செய்தனர்.இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி, தலைமை ஆசிரியர் தாரகேஸ்வரி மற்றும் சத்துணவு பணியாளர்கள், ஆறு மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், அங்கிருந்து, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், மாணவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தார். பின், மாலை, 5:00 மணிக்கு அனைவரும் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, யூனியன் கமிஷனர் முத்துக்குமார், குளித்தலை ஆர்.டி.ஓ.,(பொ) சிவக்குமார், மண்டல தாசில்தார் நீதிராஜன், வட்டார கல்வி அலுவலர் மணிமாலா உள்ளிட்ட அதிகாரிகள், சிகிச்சையில் இருந்த மாணவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
