/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருவமழை காலத்தில் பாதுகாக்கும் வழிமுறை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆலோசனை
/
பருவமழை காலத்தில் பாதுகாக்கும் வழிமுறை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆலோசனை
பருவமழை காலத்தில் பாதுகாக்கும் வழிமுறை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆலோசனை
பருவமழை காலத்தில் பாதுகாக்கும் வழிமுறை தோட்டக்கலை துணை இயக்குனர் ஆலோசனை
ADDED : அக் 16, 2025 01:13 AM
கரூர், கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தில், தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க வேண்டும். நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் சேதமடைந்திருந்தால் சரி செய்ய வேண்டும். மா, பலா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை போன்றவைகளில் காய்ந்த, பட்டுபோன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் குவித்து வைக்க வேண்டும்.
காய்கறி மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களில், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில், குச்சிகளால் முட்டு கொடுத்து சாயாத வகையில் பாதுகாக்க வேண்டும். பசுமை குடிலின் அடிப்பாகத்தை, பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமை குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின், உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, தேவையான தொழு உரமிட வேண்டும்.
முருங்கையில் காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, கிளைகளை கவாத்து செய்து அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும். வாழை மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து வைக்க வேண்டும். உறுதியான கம்புகளை கொண்டு ஊன்றுகோலாக மரத்துக்கு முட்டு கொடுக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த வாழைத்தார்களை அறுவடை செய்து விட வேண்டும். மற்ற தோட்டக்கலை பயிர்களில், அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாசனம், உரமிடுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மழைநீர் வடிந்த பின்பு பயிர்களுக்கேற்றவாறு மேல் உரமிட்டு மண் அணைக்க வேண்டும். நுண்ணுாட்ட சத்துகளை இலை வழி மூலம் தெளித்தல் வேண்டும். வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.