/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருவமழை துவங்கியதால் விவசாய பணிகள் மும்முரம்
/
பருவமழை துவங்கியதால் விவசாய பணிகள் மும்முரம்
ADDED : அக் 29, 2025 01:18 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, நஞ்சை காளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.
அரவக்குறிச்சி அடுத்த நஞ்சை காளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நீண்ட நாட்களாக மழையை எதிர்நோக்கியிருந்த விவசாயிகள், தற்போது ஆர்வத்துடன் தங்களது நிலங்களில் பயிரிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் அமராவதி ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களின் நீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. சமீபத்தில் வாய்க்கால்களில் சிறிதளவு நீர் வந்துள்ளதால், வயல்களில் டிராக்டர்கள் ஓடி உழவு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தற்போது இப்பகுதியில் மஞ்சள், மரவள்ளி கிழங்கு, சோளம் மற்றும் நெல் உள்ளிட்ட விதைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சிலர் நிலத்தை சமப்படுத்தி, நீர் விடும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்ற சிலர் விதை தயார் மற்றும் உரமிடும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தாண்டு மழை, உரிய நேரத்துக்கு வந்திருப்பது பெரும் நம்பிக்கை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மழை நன்றாக பெய்தால் நெல், மஞ்சள் போன்ற பயிர்களில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என நம்புகிறோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நஞ்சை காளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புற விவசாய நிலங்கள் பசுமை போர்வையில் மிளிர்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு விவசாய நிலங்கள் மீண்டும் உயிர் பெற்று, விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளது.

