/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆய்வுடன் நின்ற ஆனங்கூர் ரயில்வே பாலம் பணி
/
ஆய்வுடன் நின்ற ஆனங்கூர் ரயில்வே பாலம் பணி
ADDED : மே 30, 2024 01:38 AM
பள்ளிப்பாளையம், ஆனங்கூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ரயில்வே பாதை உள்ளதால், இங்கு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை - திருச்செங்கோடு வழித்தடத்தில், ஆனங்கூர் பகுதியில் இரண்டு ரயில் பாதை செல்கின்றன. இது சென்னை, கேரளா செல்லும் பிரதான ரயில் பாதையாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள், ரயில் பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். ரயில்வே கேட் மூடப்படும் போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும். ரயில் சென்ற பின், மீண்டும் ரயில்வே கேட் திறக்கப்படும். ரயில்வே கேட் மூடப்படும் போது, 10 நிமிடம் வரை வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவசர வேலையாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ரயில்வே கேட் பராமரிப்பு பணியின் போது, இரண்டு, மூன்று நாட்கள் வரை கேட் மூடப்படும். இந்த சமயத்தில் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் தான் செல்ல வேண்டும். இதனால் பல ஆண்டாக ஆனங்கூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இங்கு மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனங்கூர் பஞ்., தலைவர் சிங்காரவேலு கூறியதாவது:
கடந்த, 4 ஆண்டுக்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆனங்கூர் ரயில்பாதை பகுதியில் மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் எந்த பணியும் நடக்கவில்லை. கிராம சபை கூட்டத்திலும் பலமுறை, ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.