/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நகரில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
கரூர் நகரில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவஸ்தை
கரூர் நகரில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவஸ்தை
கரூர் நகரில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : அக் 01, 2025 02:10 AM
கரூர்:கரூர் நகரப்பகுதிகளில், அடிக்கடி பள்ளங்கள் விழுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதி யில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பல முறை பள்ளம் ஏற்பட்டது. அதை, பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள், போடப்பட்டு சரி செய்யப்பட்டது.
பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு பணிகள் நடக்கும் போது, அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக, தடை செய்யப்படும். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில், செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், பள்ளம் விழுந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ள, இடங்களில் சாலையின் மேல் பகுதிகளில் பாதாள சாக்கடை மூடிகள் சரிந்த நிலையில் தற்போது உள்ளது. இதனால், மீண்டும் பள்ளம் விழுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். மேலும், பள்ளம் விழுந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வாகனங்களில் வீடுகளுக்கு செல்ல முடியாமல், வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் ஐந்து சாலை கோடீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சாலையின் நடுவில் நேற்று முன்தினம் பள்ளம் விழுந்தது. அதை உடனடியாக சரி செய்ய, மாநகராட்சி நிர்வாகம் தவறி விட்டது. இதையடுத்து, பள்ளம் விழுந்த பகுதியில், இரும்பு தடுப்புகள் மற்றும் மரக்கிளைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, பாதாள சாக்கடை குழாயில் அழுத்தம் காரணமாக பள்ளம் ஏற்படும் போதெல்லாம், தற்காலிகமாக தீர்வை ஏற்படுத்துவதை கைவிட்டு, நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும், சரிந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.