ADDED : நவ 16, 2026 07:16 AM

கரூர்:அமராவதி
அணையில் இருந்து, ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர்
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் மையப்பகுதியில் மணல் திருட்டு
கன ஜோராக நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், அமராவதி
ஆற்றுப்பகுதிகளில், மணல் குவாரிகள் அமைக்க கூடாது என,
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், உள்ளூர்
தேவைக்காக மாட்டு வண்டிகளில், இரவு நேரங்களில் மணல் அள்ளி செல்வதை,
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
அவ்வப்போது, ஒரு சில வழக்குகள் மட்டும் போலீசார் தரப்பில் பதிவு
செய்யப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தேவை மற்றும்
பாசனத்துக்காக, அமராவதி ஆற்றில் கடந்த, செப்., மாதம் முதல் தண்ணீர்
திறக்கப்பட்டது. தற்போது, அமராவதி ஆற்றுப்பகுதியில், சம்பா நெல்
சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. மழை காரணமாக, அமராவதி ஆற்றில்
திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆற்றின்
ஒரு பகுதியில் மட்டும் செல்லும் நிலை உள்ளது. இதனால், மறு பக்கம்
கரையோரம் மற்றும் மையப்பகுதிகளில் தண்ணீர் செல்லாத இடங்களில், இரவு
நேரத்தில் மணலை அள்ளி செல்ல வசதியாக, குவித்து வைத்துள்ளனர்.
குறிப்பாக,
அமராவதி ஆற்றில் குறைந்தளவே தற்போது தண்ணீர் செல்கிறது. அதை
பயன்படுத்தி கொண்டு கரூர் மாவட்டத்தில், ராஜபுரம், சின்னதாராபுரம்,
அணைப்பாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், கோயம்பள்ளி
உள்ளிட்ட பகுதிகளில், மாட்டு வண்டிகள் மூலம், மணல் திருட்டு மீண்டும்
கன ஜோராக துவங்கியுள்ளது.
அதை, கண்டுகொள்ளாமல்,
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல், கும்ப கர்ண
துாக்கத்தில் உள்ளனர். இதனால், கரூர் மாவட்டத்தில் அமராவதி
ஆற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என, விவசாயிகள்
கவலையில் உள்ளனர்.
