ADDED : நவ 24, 2024 01:01 AM
அரவக்குறிச்சி, நவ. 24-
அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட சுகாதார அமைப்பு சார்பில், புகையிலை இல்லா இளைய சமுதாயம் மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறும் விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் (பொறுப்பு) சகாய வில்சன் தலைமையில் நடந்தது.
மகிழ்முற்ற மாணவர் தலைவி நுாருல் பௌஜானா வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்மணி, லெனின், கார்த்திக் ஆகியோர் புகையிலை இல்லா சமுதாயம் படைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். புகையிலையை உட்கொள்வதால் நுரையீரல் புற்றுநோய், அல்சர், ரத்த கொதிப்பு போன்றவை ஏற்படுவதை மாணவர்களுக்கு கூறினர். மேலும் புகையிலை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
'நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ள மாட்டேன். எனது குடும்பத்தினரையோ, அருகில் உள்ள அறிமுகமானவரையோ புகையிலை மற்றும் எந்த ஒரு வடிவிலான புகையிலை சார்ந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது' என உறுதிமொழியேற்றனர்.
மேலும் பிறப்பு சான்றிதழ் ஓராண்டுக்குள் பெறுதல் அவசியம் என்பதையும், ஓராண்டுக்குள் இலவசமாக வழங்கப்படுகிறது. தாமத கட்டணம், 200 ரூபாய் உடன் இரண்டு ஆண்டுகளில் பெறலாம் என்பதும், பெயர் வைக்காத பிறப்பு சான்றிதழ்களில் பெயர் வைத்து பெறுவது வரும் டிச., 31க்குள் முடிவடைவதால், அனைவரும் பிறப்பு சான்றிதழ் பெறுதல் கட்டாயம் என்பதையும் வலியுறுத்தினர்.
ஆசிரியர்கள் ரொகையா பீவி, கவிதா, புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி,ஜோதிமணி, உஷாராணி, கதிரேசன் ஆகியோர் பங்கேற்றனர். அறிவியல் ஆசிரியர் ராபியா பஸ்ரி நன்றி கூறினார்.
