வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் குறித்து விழிப்புணர்வு
வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் குறித்து விழிப்புணர்வு
ADDED : அக் 15, 2026 05:25 AM
அரவக்குறிச்சி:தமிழ்நாடு
மின் பகிர்மான கழகத்தின், கரூர் மின் பகிர்மான வட்டம் சார்பில்,
பள்ளப்பட்டியில் வீடுகளின் கூரைகளில் சூரிய ஒளி கருவிகள் அமைப்பதை
ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம், விழிப்புணர்வு முகாம்
நடைபெற்றது.
சப் - கலெக்டர் வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கி, சூரிய
மின்சக்தியின் முக்கியத்துவம் குறித்தும், அரசு வழங்கும் சலுகைகள்
குறித்தும் விளக்கினார். கரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை
பொறியாளர் பரிமளா முன்னிலை வகித்து பேசினார்.
கரூர் கோட்ட
செயற்பொறியாளர் யோகநாதன்,'வீட்டு உபயோகத்திற்கு சூரிய ஒளி
மின்சாரம் அமைப்பதால், மின் கட்டணம் கணிசமாக குறையும். இயற்கை வளத்தை
பயன்படுத்தி, சுற்றச்சூழலுக்கு பாதிப்பில்லாத முறையில் மின்சாரம்
தயாரிப்பது எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் எனக்கூறி,
இத்திட்டத்தின் நன்மைகள், மானிய விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும்
முறைகள் குறித்து' எடுத்துரைத்தார்.
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர்
ஆனந்தகுமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் துணை
பொறியாளர்கள், சூரிய ஒளி மின்சாதன விற்பனையாளர் பிரதிநிதிகள்,
பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், மின் நுகர்வோர், பொதுமக்கள், சமூக
ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு
பெற்றனர். வங்கி மேலாளர்கள், இத்திட்டத்திற்கான கடன் உதவி குறித்து
ஆலோசனை வழங்கினர்.
ஏற்பாடுகளை, பள்ளப்பட்டி நகர் மின் பகிர்மான இயக்கப் பிரிவு உதவி மின் பொறியாளர் சையது பஷீர் அப்பாஸ் செய்திருந்தார்.
