/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழைத்தார்களுக்கு விலை இல்லாததால் கவலை
/
வாழைத்தார்களுக்கு விலை இல்லாததால் கவலை
ADDED : நவ 01, 2025 01:21 AM
கரூர்,  கரூரில், வாழைத்தார்கள் குறைந்தளவிலேயே வந்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார், கரூர் மாவட்ட த்தில் மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள், ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ள நிலையிலும், விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன், காற்றுடன் கூடிய மழை காரணமாக, வாழைத்தார்கள் சாய்ந்தது. இதனால், குறைந்தளவில்தான் வாழைத்தார்கள் வரத்தானது. வழக்கம் போல் கரூர் டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, புலியூர், திருமாநிலையூர், செல்லாண்டி பாளையம், ராயனுார், காந்தி கிராமம், திருகாம்புலியூர், ஆண்டாங்கோவில், சுக்காலியூர், மண்மங்கலம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு ரயில்வே ஸ்டேஷன் சாலை மார்க்கெட்டில் இருந்துதான், வாழைத்தார்கள் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு, கொண்டு செல்லப்படும்.
ஆனால், பண்டிகை காலம் இல்லாததால், வாழைத்தார்களை ஏலம் எடுக்க, அதிகளவில் சில்லரை வியாபாரிகள் வரவில்லை. இதனால், வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
கடந்த ஆயுத பூஜை, தீபாவளி நாட்களில், 800 ரூபாய் வரை விற்ற பூவன் வாழைத்தார் தற்போது, 400 முதல், 600 வரையிலும், 700 ரூபாய்க்கு விற்ற செவ்வாழை, 500 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்க்கும் ஏலம் போகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

