/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொன்னணியாறு அணையில் படகு துறை பணிகள் தீவிரம்
/
பொன்னணியாறு அணையில் படகு துறை பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 24, 2025 01:04 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் அருகே பொன்னணியாறு அணையை புதுப்பித்து, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.,12ல் பொன்னணியாறு அணை பகுதிகளை ஒட்டியுள்ள கடவூர் வனப்பகுதிகளை, தேவாங்கு சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளை அதிகரிக்க, கடவூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் அணையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் உணவகம் மற்றும் படகு குழாம் அமைக்கும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த, 2023 ஜூலை 6ல் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.
அன்று முதல் இந்த பணிகள் கடந்த, 23 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் புதிய கட்டட பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.
இதேபோல் பொன்னணியாறு அணையின் இருபுறங்களிலும், மலைகளால் அமைந்துள்ள இயற்கையை சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து ரசிப்பதற்காக, படகுத்துறை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சுற்றுலா பயணிகளிடம் டிக்கெட் பெறும் அறை, 3 படகுகள், கழிப்பறை மற்றும் படித்துறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.