பஸ்கள் நின்று செல்லாததால் மீண்டும் மறியல் போராட்டம்
பஸ்கள் நின்று செல்லாததால் மீண்டும் மறியல் போராட்டம்
ADDED : நவ 14, 2026 07:04 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அருகே உள்ள, குமரன்டாண்வலசு பகுதியில், பல ஆண்டுகளாக கோரிக்கை
விடுத்தும், நிழற்கூடத்தில் பஸ்கள் நின்று செல்லாததால், மீண்டும்
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி
அருகே குமரன்டாண்வலசு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட
குடியிருப்பு உள்ளது. இப்பகுதி மக்கள், அரவக்குறிச்சிக்கு செல்ல 2
கி.மீ., துாரம் நடந்து செல்வதால், தங்கள் பகுதிக்கு பயணிகள்
நிழற்கூடம் வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கரூர் எம்.பி., ஜோதிமணியின் நாடாளுமன்ற நிதி மூலம்,
கடந்த ஆண்டு நிழற்கூடம் அமைத்து தரப்பட்டது.
நிழற்கூடம் அமைத்து
தரப்பட்டாலும், பஸ்கள் நின்று செல்வதில்லை என, இப்பகுதி மக்கள்
போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்து
வந்தனர். இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு,
குமரன்டாண்வலசு பகுதி மக்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி, சாலை
மறியலில் ஈடுபட்டனர். பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் செல்லும்
முக்கிய சாலையாக உள்ளதால், 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி போலீசார் மற்றும்
போக்குவரத்து துறை அதிகாரிகள், பொதுமக்களை சமாதானம் செய்து,
விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், 10
நாட்கள் கழித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை
6:30 அளவில் திடீரென அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ
இடத்திற்கு வந்த காவல் துறையினர், போக்குவரத்து பணிமனை அருகே
அமைந்துள்ள குமரன்டாண்வலசு பகுதியில் பஸ்கள் நின்று செல்ல, ஓரிரு
நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால்
மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
