ADDED : ஆக 12, 2026 07:23 AM

கரூர்:கொடி வகை சாகுபடிக்கு, கல்துாண் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என, கலெக்டர் முத்துக்குமரன் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் புடலை, பீர்க்கன், சுரை, பாகல் போன்ற கொடிவகை காய்கறிகளை, சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நிரந்தர கல்துாண் பந்தல் அமைப்பதற்கு, ஒரு ஹெக்டருக்கு, 3 லட்சம் ரூபாய்- மானியம் வழங்கப்படுகிறது. நிரந்தர கல்துாண்கள் அல்லது சிமென்ட் துாண்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நிரந்தர பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் காடுகள் திட்டம்
ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் பந்தல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஒரு ஹெக்டராகும். இதன்மூலம் காய்கறிகள் தரையில் படராமல், பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு, அதிக மகசூல் பெற இயலும். வேளாண் காடுகள் திட்டத்தில், மகாகனி, தேக்கு உள்ளிட்ட மரவகை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டர் நிலமுள்ள விவசாயிகளுக்கு, 160 கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்தது 0.20 ஹெக்டர் நிலம் இருத்தல் வேண்டும். இத்திட்டத்திற்காக அரசு தோட்டக்கலைப் பண்ணை, முதலைப்பட்டியில், 25,000 மரவகை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மூங்கில் இயக்கம்
தேசிய மூங்கில் இயக்கம் 2026--27 திட்டத்தின் கீழ், விவசாய வயல்கள் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மூங்கில் சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டருக்கு, 400 மூங்கில் செடிகள் மற்றும் இடுபொருட்கள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்குரிய, ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியும் அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
