ADDED : ஏப் 18, 2025 02:30 AM
கரூர்:நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக, சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை திரும்ப பெற வலியுறுத்தி, கரூர் தலைமை தபால் நிலையம் முன், காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு தலைமை வகித்தார்.
சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களை எதிர்க்க நேருவால் துவக்கப்பட்டது, நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை. இது நலிவடைந்துள்ள நிலையில், அதை மீட்க காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்து உதவியது. ஆனால், சோனியா, ராகுல் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்., கரூர் மாநகர தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுல், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

