/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்: செந்தில்பாலாஜி
/
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்: செந்தில்பாலாஜி
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்: செந்தில்பாலாஜி
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்: செந்தில்பாலாஜி
ADDED : ஜூன் 22, 2025 01:07 AM
கரூர், ''கரூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள், ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர் திருமாநிலையூரில் கட்டப்பட்டு வரும், புதிய ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. 68 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 82 கடைகள், 64 கழிப்பறை, உணவுக்கூடம், பார்க்கிங் வசதி, அவுட் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.
மணவாசியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலத்தில் கரூர் அரசு வேளாண் கல்லுாரி கட்டடம் கட்டப்படுகிறது. இதற்காக, 7 கோடி ரூபாய் வேளாண்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 76 கோடி ரூபாய் மதிப்பில் கல்லுாரி கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் சுற்றுவட்ட சாலை பணிக்கு, நிலம் கையகப்படுத்த திட்ட மதிப்பு, 370 கோடி ரூபாய், சாலை அமைக்க, 330 கோடி என மொத்தம், 700 கோடியில் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஈரோடு சாலை குட்டகடை முதல், மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலை வரை, சுற்று வட்ட சாலை பணி தொடங்கவுள்ளது. இரண்டாம் கட்டமாக, சேலம் தேசிய நெடுஞ்சாலை முதல் நெரூர், 16 கால் மண்டபம் வரை நடக்கிறது.
நெரூர் - உன்னியூர் பாலம் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும். கடவூரில், 250 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்காவுக்கு, நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில், மதுரை நெடுஞ்சாலையில் முருங்கை பூங்காவிற்கு, 6 ஏக்கர் நிலம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகள், 800 கோடி மதிப்பில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.