ADDED : அக் 07, 2025 01:05 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வட
கிழக்கு பருவமழை காரணமாக, மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கரூர் மாவட்டத்தில் தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது.
நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை நிலவரம் (மி.மீ.,) கரூர், 13.60, அரவக்குறிச்சி, 54, அணைப்பாளையம், 22, க.பரமத்தி, 31.60, குளித்தலை, 5, கிருஷ்ணராயபுரம், 19.20, மாயனுார், 17, பஞ்சப்பட்டி, 5.20, கடவூர், 11, பாலவிடுதி, 12 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 15.88 மி.மீ., மழை பதிவானது.
* மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 20 ஆயிரத்து, 280 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 18 ஆயிரத்து, 676 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக விநாடிக்கு, 17 ஆயிரத்து, 556 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.01 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
* அரவக்குறிச்சியில் ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.