ADDED : நவ 05, 2026 07:06 AM
கரூர்:புகழூர்
நகராட்சி அலுவலகத்தில், ஆணையாளரின் செயல்பாட்டை கண்டித்து,
நகராட்சி தலைவர் உள்பட, 22 கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி
தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த குணசேகரனும், துணை தலைவராக
பிரதாபனும் உள்ளனர். நகராட்சி ஆணையாளராக வெங்கடாசலம் கடந்த,
ஐந்து மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஆணையாளர்
வெங்கடாசலம் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்காமல்
காலம் தாழ்த்துவதாகவும், புகழூர் நகராட்சி பகுதியில் கடந்த,
தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு, வரி ரசீது தராமல்
இழுத்தடிப்பு செய்வது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, நேற்று காலை, 11:30 மணிக்கு நகராட்சி தலைவர் குணசேகரன்
தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக,
பா.ஜ., கவுன்சிலர் கோபிநாத், காங்., கவுன்சிலர் சுரேஷ், மா.கம்யூ.,
கவுன்சிலர் இந்துமதி ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். ஆனால், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும்,
போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சந்தித்து பேசவில்லை.
இந்நிலையில்
நேற்று இரவு, 9:00 மணிக்கு அரவக்குறிச்சி தி.மு.க., - எம்.எல்.ஏ.,
இளங்கோ, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர், கவுன்சிலர்களை
சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். சிறிது நேரத்துக்கு பிறகு,
கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது, நகராட்சி ஆணையாளரை
இடமாற்றம் செய்ய வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இன்னும்
ஒரு வாரத்தில், கலெக்டருடன் பேசி விட்டு, முடிவு தெரிவிப்பதாக
ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் கூறினார். இதையடுத்து, கவுன்சிலர்கள்
உள்ளிருப்பு போராட்ட த்தை கைவிட்டு இரவு, 9:30 மணிக்கு கலைந்து
சென்றனர். இதனால், புகழூர் நகராட்சி அலுவலகத்தில், 10 மணி நேரம் நடந்த
கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
