ADDED : மே 03, 2024 07:17 AM
கரூர் : கரூர் அருகே, நெரூரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்காவில், உடைந்த நிலையில் உபகரணங்கள் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கின்றன.
கரூர் மாவட்டம், நெரூரில் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த அதிஷ்டானத்துக்கு அரசியல்வாதிகள், திரையுல பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் மிக சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக நெரூர் மாறி வருகிறது.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக, சில ஆண்டுக்கு முன், நெரூர் காவிரியாற்று பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில், சுற்றுலா பூங்கா அமைக்கப்பட்டது. சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்துக்கு செல்லும் பக்தர்கள், காவிரியாற்று பகுதியில் சுற்றுலா பூங்காவுக்கும், குழந்தைகளுடன் சென்று வந்தனர். ஆனால், பூங்காவை பொதுப்பணி துறை அதிகாரிகள் சரிவர பராமரிப்பு செய்யாததால், அதில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்தன. சிலர் பூங்காவில் இருந்த இரும்பு சாமான்களை எடுத்து சென்று விட்டனர். தற்போது பூங்காவை மூள் செடிகளை வைத்து அடைத்து விட்டனர். பூங்காவை சீரமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.