/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆபத்தான சாலை விரிவாக்க பணி சாயும் நிலையில் மின் கம்பங்கள்
/
ஆபத்தான சாலை விரிவாக்க பணி சாயும் நிலையில் மின் கம்பங்கள்
ஆபத்தான சாலை விரிவாக்க பணி சாயும் நிலையில் மின் கம்பங்கள்
ஆபத்தான சாலை விரிவாக்க பணி சாயும் நிலையில் மின் கம்பங்கள்
ADDED : செப் 22, 2024 06:19 AM
கரூர்: சாலை விரிவாக்க பணியில் மின் கம்பத்தை சுற்றி பள்ளம் தோண்டி பேவர் பிளாக்கல் பதிக்கும் பணி நடப்பதால், மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர், சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி வரை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 3 கி.மீட்டர் தொலைக்கு, 20 கோடி ரூபாய் நடைபாதையுடன் வடிகால் வசதி பணி நடந்து வருகிறது. வடிகால் வசதி, 3.45 அடி ஆழமும், 3.45 அடி அகலமும் உள்ளவாறு கட்டப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் எளிதாக இரு புறமும் உள்ள வடிகால் உள்ளே செல்வதற்கு வசதியாக, 20 அடிக்கு ஒரு இடத்தில் வலையுடன் கூடிய துளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சாலையோரத்தில் உள்ள மரங்களில் கட்டாயமாக அகற்ற வேண்டியதை மட்டும் அகற்றிவிட்டு மீதி மரங்கள் அகற்றப்படாமல், அதற்கு ஏற்றார் போல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடிகால் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக, பேவர் பிளாக்கல் பதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, மழை வடிகாலுக்கும், சாலைக்கும் இடையில் உள்ள பகுதிகளுக்கு பேவர் பிளாக்கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, தான்தோன்றிமலையில் இருந்து வெங்ககல்பட்டி வரை மழை வடிகால் ஒட்டியுள்ள பகுதியில் பேவர் பிளாக்கல் பதிக்க ஏதுவாக பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் நிரப்பப்படுகிறது. அப்பகுதியில் மின் கம்பம் பிடிமானம் இல்லாமல் வழுவிழந்த நிலையில் உள்ளது. இந்த சாலையில், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இங்கு, ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், மின் இணைப்பு துண்டிக்காமல் அந்த சாலையோரத்தில், 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை சுற்றி ஆபத்தான முறையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரத்தினம் சாலையில் வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு பள்ளம் தோண்டிய போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் சாய தொடங்கியது. பின், மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். இரவு நேரம் என்பதால், எந்த விபத்து ஏற்படவில்லை.
இந்நிலையில் சாலையில் பகல் நேரத்தில் எந்தவிதமான பாதுகாப்பு முறைகளையும் மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கரூர் உதவி பொறியாளர் பொறியாளர் கர்ணனிடம் கேட்ட போது, ''உடனடியாக மின் கம்பங்கள் சாயாமல் இருக்க மின்வாரியத்திற்கு தகவல் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.