ADDED : ஜூன் 17, 2025 02:23 AM
குளித்தலை, மின்சாரம் பாய்ந்து, மின் ஊழியர் பலியானார்.
குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்.,பரந்தாடி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன், 56, மின்சார வாரியத்தில் ஆய்வாளராக பணியில் இருந்தார். இவர் நேற்று மாலை, 4:30 மணியளவில் தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள, டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் பாய்ந்து முனியப்பன் தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடினார்.
மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து அவரை மீட்டனர். பின்னர், தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முனியப்பனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.