/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பு
/
நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பு
நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பு
நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு விட எதிர்பார்ப்பு
ADDED : செப் 30, 2025 12:59 AM
அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், அரவக்குறிச்சி வழியாக சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும், 3 ஓடைகளில் விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதில் முதல் ஓடை அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் இருந்து, ஆர்.புதுப்பட்டி, ஆர்.ஜி.வலசு, ஒலிகரட்டூர், செல்லிவலசு வழியாக சீத்தப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் இணைகிறது. 2-வது குப்பையக்கா ஓடை ரங்கமலையில் இருந்து மலைப்பட்டிக்கு மேல்புறமாக சென்று புளியம்பட்டி, வரப்பட்டி, பூமதேவம், பள்ளப்பட்டி ஷா நகர் வழியாக ஓட்டனை அருகே சென்று நஞ்காஞ்சி ஆற்றில் இணைகிறது. 3-வது ஓடை மலைப்பட்டி, அனுமந்தம்பட்டி, ஆண்டிபட்டி, குமாரபாளையம், ஓடப்பட்டிக்கு கீழ்புறமாக சென்று, பெத்தாட்சி நகர் அருகே குடகனாற்றில் இணைகிறது. நங்காஞ்சி அணையின் உபரி நீரை, ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஓடைகளில் விட்டால் விவசாயம் செழிக்கும். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்னை இருக்காது.
இதுகுறித்து, அரவக்குறிச்சி விவசாயிகள் கூறியதாவது:
நங்காஞ்சி ஆறு குடகனாறு இணைப்பு திட்டமாகும். இத்திட்டத்தால் அரவக்குறிச்சி, சேந்தமங்கலம் கீழ் கிராமம், பள்ளப்பட்டி, இசட் -ஆலமரத்துப்பட்டி, மஞ்சுவளி, எருமார்பட்டி, சுற்றுவட்டார பகுதி கிராம விவசாயிகளின் நிலத்தடி நீர் பிரச்னை தீரும். இடையகோட்டை நங்காஞ்சி ஆறு அணை, முன்னாள் முதல்-வர் கருணாநிதி ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த அணையிலிருந்து மழை காலங்களில், 4, 5 மாதங்களுக்கு உபரி நீர் வீணாக அமராவதி ஆற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது.
ஆனால் மேட்டு பகுதியை நம்பித்தான் விவசாயமே உள்ளது. மழை சரியாக பெய்யாவிட்டால் குடிநீருக்கே சிரமப்படும் நிலை உள்ளது. எனவே வீணாக செல்லும் உபரி நீரை மட்டும் இந்த ஓடைகளில் இணைத்தால் மலைப்பட்டி, எரமநாயக்கனுார், ஆண்டிபட்டி பகுதி ஓடைகளில் உள்ள தடுப்பணைகளில் நீர் தேங்கும். அனுமந்தம்பட்டி, ஓடைப்பட்டி, பெத்தாச்சி நகர் குளங்களில் நீர் நிரம்பும். இதனால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த திட்டத்தால் ஐந்தாறு தடுப்பணைகளிலும் நீர் தேங்கும். மேலும் லிங்கமநாயக்கம்பட்டி ஊராட்சி, சேந்தமங்கலம் கீழ் ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வறட்சியின் பிடியில் உள்ள பள்ளப்பட்டியின் கிழக்கு பகுதியான ஷாநகர் பகுதி மக்களுக்கும், ஆழ்துளை கிணறுகளில் நீர் அதிகமாகும். இதனால் குடிநீர் பிரச்னை தீரும். மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.