/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லறை திருநாளையொட்டி கேரளாவிற்கு 30 லட்சம் ரோஜா அனுப்பி வைப்பு கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கல்லறை திருநாளையொட்டி கேரளாவிற்கு 30 லட்சம் ரோஜா அனுப்பி வைப்பு கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கல்லறை திருநாளையொட்டி கேரளாவிற்கு 30 லட்சம் ரோஜா அனுப்பி வைப்பு கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கல்லறை திருநாளையொட்டி கேரளாவிற்கு 30 லட்சம் ரோஜா அனுப்பி வைப்பு கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 02, 2025 01:34 AM
ஓசூர், ?:கல்லறை திருநாளையொட்டி ஓசூரிலிருந்து, 30 லட்சத்திற்கு மேலான ரோஜாக்கள், கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. ரோஜாக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, அலங்கார மலர்களான ரோஜாக்கள், அதிகளவில் சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, மக்கள் விரும்பி வாங்கும் சிவப்பு நிறமான தாஜ்மகால், வெள்ளை நிறமான அவலாஞ்சி, இளஞ்சிவப்பு நிறமான நோப்லஸ், ஆரஞ்சு நிறமான கார்வெட், மஞ்சள் நிறமான கோல்ட் ஸ்டிரைக் போன்றவை அதிகளவில் சாகுபடியாகின்றன. இங்கிருந்து, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும், கோவை, திருச்சி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உள்ளூர் சந்தை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இது தவிர, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆக்லாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு, ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகின. கடந்த மாதம், 15ம் தேதி வரை, 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு, 60 முதல், 80 ரூபாய் வரை விவசாயிகளிடம் வாங்கப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கும் கல்லறை திருநாளையொட்டி, ரோஜாக்களின் விலை உயர்ந்து விவசாயிகளிடமிருந்து தரமான ரோஜாக்கள் ஒரு கட்டு, 200 முதல், 250 ரூபாய் வரை வாங்கப்பட்டன. இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, மத்தம் அக்ரஹாரத்தில் ரோஜா சாகுடியில் ஈடுபட்டுள்ள வெங்கட்ராஜ், 36, என்பவர் கூறியதாவது:
கேரளாவில், கல்லறை திருநாள் நிகழ்ச்சி, நாட்டின் மற்ற பகுதிகளை விட சிறப்பாக அனுசரிக்கப் படுகிறது. குறிப்பாக, திருச்சூர், பாலக்காடு, கொல்லம், எர்ணாகுளம் பகுதிகளில் அதிகமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று (நவ.2) கல்லறை திருநாள் அனுசரிக்கப்படும் நிலையில், கடந்த, 15 நாட்களாக ரோஜாக்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளை நிற அவலாஞ்சி ரோஜாக்களுக்கு கடும் தேவை உள்ளது. அதனால் அதன் விலை ஒரு கட்டு, 250 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த, 15 நாட்களில் அதிகபட்சமாக, 30 லட்சம் ரோஜாக்களுக்கு மேல், கேரளா சென்றிருக்கும். மேலும் டில்லி, ஐதராபாத் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளோம். உள்ளூர் சந்தையில் நல்ல விலை கிடைத்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

