/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒரு கிலோ முருங்கை ரூ.5 வேதனையில் விவசாயிகள்
/
ஒரு கிலோ முருங்கை ரூ.5 வேதனையில் விவசாயிகள்
ADDED : ஆக 15, 2025 02:33 AM
அரவக்குறிச்சி :ஒரு கிலோ முருங்கை, 5 ரூபாய்க்கு விற்பதால் அதை பறிப்பதற்கான கூலி கூட தர முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக, முருங்கை விவசாயம் பிரதானமாக உள்ளது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் இறுதியில் முருங்கை விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ, 300 ரூபாய்-க்கு மேல் விலைபோனது. மார்ச் முதல் சீசன் தொடங்கி உள்ளது. தற்போது 1 கிலோ முருங்கைக்காய், 5 முதல் அதிகபட்சமாக, 7 ரூபாய் வரை விலை போகிறது. முருங்கை சீசன் தொடங்கி காய்கள் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது.
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் முருங்கை மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் விற்றுவிடுவர். அங்கிருந்து பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல இடங்களுக்கு லாரிகளில் முருங்கைக்காய்களை அனுப்பி வருகின்றனர்.
தற்போது முருங்கை சீசன் தொடங்கி, காய்கள் அதிக விளைச்சல் ஏற்பட்டு விலை குறைவாக போவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கிலோ முருங்கைக்காய், 5 ரூபாய்க்கு விலை போவதால் முருங்கைக்காய் பறிப்பதற்கான கூலி கூட தர முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் முருங்கை விவசாயத்தையே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
தெரிவித்துள்ளனர்.