ADDED : டிச 18, 2024 01:48 AM
கரூர், : கரூரில் இடிந்து விழும் நிலையில், மாநகராட்சி துாய்மை தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளதால், அவர்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
கரூர் நகராட்சி தலைவராக, பெத்தாச்சி செட்டியார் என்பவர் பொறுப்பில் இருந்த போது கடந்த, 79 ஆண்டுகளுக்கு முன் வெங்கமேடு சாலையில், சர்ச் கார்னர் பகுதியில் துாய்மை தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். இதில், தற்போது துாய்மை தொழிலாளர்களின் குடும்பத்தினர், 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், துாய்மை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வசிக்கின்றனர்.
இதுகுறித்து, துாய்மை தொழிலாளர்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, வீடுகளை பராமரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும், வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வீடுகளில் தண்ணீர் ஒழுகிய வண்ணம் உள்ளது. இரவு நேரத்தில் துாங்க முடியாது. குழந்தைகளுடன் வசிக்க முடியவில்லை. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.