/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுங்கு விளைச்சல் அதிகரித்தும் பறிக்க ஆள் இல்லாததால் விலை அதிகரிப்பு
/
நுங்கு விளைச்சல் அதிகரித்தும் பறிக்க ஆள் இல்லாததால் விலை அதிகரிப்பு
நுங்கு விளைச்சல் அதிகரித்தும் பறிக்க ஆள் இல்லாததால் விலை அதிகரிப்பு
நுங்கு விளைச்சல் அதிகரித்தும் பறிக்க ஆள் இல்லாததால் விலை அதிகரிப்பு
ADDED : பிப் 17, 2025 03:10 AM
கரூர்: பருவமழை காரணமாக கரூர் மாவட்டத்தில், நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், அறுவடை செய்ய ஆள் இல்லாததால், நுங்கு விலை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு, தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது.
குறிப்பாக, கரூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்த நிலையில், காவிரி, அமராவதி ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆத்துப்பாளையம் அணையில் இருந்தும், கடந்தாண்டை போல, நடப்பாண்டும் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில், பனை மரங்களில் நடப்பாண்டு நுங்கு அதிகளவில் விளைச்சல் அடைந்தது. மேலும், கள் இறக்க தடை உள்ளதால், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் நுங்கு உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கோடைக்காலம் துவங்கும் முன் கடந்த, 10 முதல் கரூர் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நுங்குக்கு கிராக்கி ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு, பகுதிகளில் இருந்து, வெட்டி கொண்டு வரப்படும் நுங்குகள் விற்பனைக்கு குறைவாக வந்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், நுங்கு விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மழை காரணமாக நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், பல அடி உயரம் கொண்ட பனை மரத்தில் ஏறி, நுங்கு பறிக்க போதிய ஆட்கள் தற்போது இல்லை. இதனால், குறைந்தளவே ஆட்கள் மரங்களில் ஏறியும், ஏணி வைத்தும் பறித்து வருகிறோம். தேவை அதிகரிப்பால், நுங்கு விலை அதிகரித்துள்ளது. தற்போது, நுங்கு விளைச்சல் அதிகம் இருந்தும், பறிக்க வசதி இல்லாததால், மூன்று நுங்கு, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஒரு நுங்கு, மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.