/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பு
/
க.பரமத்தியில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பு
ADDED : ஜன 29, 2024 12:40 PM
க.பரமத்தி: க.பரமத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், வெறிநாய்களுக்கு ஆடுகள் இறையாகி வருவதால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சி அருகே, க.பரமத்தி பகுதி கிராமங்களில், ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஆண்டு, போதிய மழை இல்லாமல், தீவனங்களை விலைக்கு வாங்கி, விவசாயிகள், ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் க.பரமத்தி, முன்னூர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறிநாய்கள் கடிப்பதால், ஆடுகள் இறந்து வருகின்றன. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆடுவளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:
போதிய மழை இல்லாததால், மானாவரி நிலங்களில் கூட விவசாயம் செய்ய முடியவில்லை. அரசு இலவசமாக வழங்கிய ஆடுகளை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம். இந்நிலையில், தெரு நாய்கள் பட்டிக்குள் புகுந்து, ஆடுகளை கடித்துக் கொன்று விடுகின்றன. நாய் கடித்து இறந்த ஆடுகளை, இறைச்சிக்குப் பயன்படுத்த முடியாது என்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.