/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குறைதீர் நாளில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
/
குறைதீர் நாளில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2025 01:02 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, குறைதீர் முகாம் நாளில், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ். பி., அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை, வெள்ளியணை சாலையில் அமைந்துள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும், திங்கள் கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதில் பங்கேற்க அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம் பாளையம், வாங்கல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பஸ்கள் மூலம் கரூர் டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்து, பின்னர் வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல்லுக்கு செல்லும் வேறு பஸ்களில் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர்.
அதேபோல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஸ்கள் மூலம் சுங்ககேட்டில் இறங்கி, வேறு பஸ்களில் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, பாளையம் மற்றும் திண்டுக்கல்லுக்கு குறைந்தளவில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் திங்கள்கிழமைகளில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்கள் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல, போதிய பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். நேற்று திங்கள்கிழமை என்பதால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம் போல், மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
அதில், பங்கேற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல, போதிய பஸ்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்தனர். பிறகு, திண்டுக்கல்லில் இருந்து கரூர் சென்ற அரசு பஸ்சில், பொதுமக்கள் நிற்க கூட கிடைக்காமல், படியில் தொங்கியபடி அவதிப்பட்டபடியே சென்றனர்.
எனவே, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கும், திங்கள் கிழமையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது அதன் வழியாக, கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.