/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரிப்பு
/
உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரிப்பு
ADDED : டிச 02, 2025 02:14 AM
கரூர், குறைந்து வரும் உற்பத்தியால், அச்சு மற்றும் உருண்டை வெல்லம் விலை அதிகரித்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளான நொய்யல், நடையனுார், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, கரும்பை பதிவு செய்துள்ள விவசாயிகள் தவிர, மற்றவர்கள் நன்கு விளைந்த கரும்பை, கரும்பாலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால், வேலாயுதம்பாளைம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகள், 10க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டப்பட்டு நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள, வெல்ல மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால், வெல்லம் தயாரிக்கும் உள்ளூர் ஆலைகளுக்கு கரும்பு அதிகளவில் கிடைப்பது இல்லை. உற்பத்தி குறைவால் அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வெல்லம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
கரும்பு தட்டுப்பாட்டால் வெல்லம் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம், 1,270 ரூபாய், உருண்டை வெல்லம், 1,250 ரூபாய்க்கு விற்றது. நடப்பு வாரம், உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,300 ரூபாய், அச்சு வெல்லம், 1,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு வழங்கப்படும், ஒரு டன் கரும்பின் விலை, 3,000 ரூபாயில் இருந்து, 3,300 ரூபாயாக விலையை விவசாயிகள் உயர்த்தி விட்டனர். இதனால், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் சற்று உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

