/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம்; இன்று ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி
/
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம்; இன்று ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம்; இன்று ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம்; இன்று ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி
ADDED : மே 29, 2024 07:22 AM
கரூர் : கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி பெரு விழாவையொட்டி இன்று மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவிலில் கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகாசண்டியாகம், மறு காப்பு கட்டுதல், தேரோட்டம், மா விளக்கு ஊர்வலம், பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை முதல், அமராவதி ஆற்றில் இருந்து, பொக்லைன் இயந்திரத்தில் (பறவை காவடி) தொங்கியபடி, பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தீச்சட்டி எடுத்து கொண்டு, அதிகளவில் பக்தர்கள் வந்தனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னதானம், மோர், கூல்டிரிங்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை, 5:15 மணிக்கு கோவிலில் இருந்து, கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும், நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடக்க உள்ளது. அதை தொடர்ந்து, ஆற்றில் பல்வேறு அமைப்புகள் சார்பில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
அதையொட்டி, மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி ஆற்றுக்கு செல்லும் சாலைகளில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் ஜூன், 6 ல் பஞ்ச பிரகாரம், 7 ல் புஷ்ப பல்லக்கு, 8 ல் ஊஞ்சல் உற்சவம், 9 ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 12ல் தொடங்கி வரும் ஜூன், 9 வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி இன்று மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. அதையொட்டி, கரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் ஜூன், 8ல் அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.