ADDED : மே 06, 2024 02:23 AM
வணிகர் தின
கொடியேற்று விழா
கரூர்: கரூர் சின்ன ஆண்டாங்கோவிலில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர் தின கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்து சங்க கொடியை ஏற்றினார். கடந்த, 41 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு நுழைவு வரியை அமல்படுத்தியது. நுழைவு வரியை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதிலும் கடையடைப்பு போன்ற போராட்டம் நடத்திய தினம் வணிகர் தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், மாநில இணைச் செயலாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் ராஜாமணி, மாவட்ட இணை செயலாளர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
மயங்கி விழுந்ததொழிலாளி பலி
குளித்தலை-
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், 30. இவர், திருச்சியில் கார், டூவீலர்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார். கடந்த, 1ல் அதிகாலை, 5:00 மணியளவில் கர்நாடகா மாநிலத்தில் நடக்கும், எம்.பி., தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, திருச்சியில் இருந்து கர்நாடகா நோக்கி ரயிலில் சென்றார். அப்போது, குளித்தலை ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக பலியானார். இவருடன் வந்த அவரது உறவினர் அம்ருத்குமார், 34, என்பவர் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாடிய 5 பேர் கைது5 பைக் பறிமுதல்
குளித்தலை: குளித்தலை அடுத்த சிந்தாமணிப்பட்டி அருகே, விராலிப்பட்டி தென்புறமுள்ள குளக்கரை கருப்பாயி அம்மன் கோவில் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிய வீரணம்பட்டி தேவேந்திரன், கார்த்திக், ராஜலிங்கம், துரை மணிகண்டன், ராஜி ஆகியோரிடமிருந்து, 12,000 ரூபாய் மற்றும் 5 டூவீலர்களை பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தனர்.