/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிப்பிட வசதி இல்லாத கரூர் தாலுகா ஆபீஸ்
/
கழிப்பிட வசதி இல்லாத கரூர் தாலுகா ஆபீஸ்
ADDED : செப் 16, 2024 03:26 AM
கரூர்: கரூர், ஜவஹர் பஜாரில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், கிளைச்சிறை, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகள் காரணமாகவும், கிளைச்சிறையில் உள்ள கைதிகளை பார்வையிட, உறவினர்கள் உள்பட நாள்தோறும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கரூர் தாலுகா வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.மேலும், கரூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள ஜவஹர் பஜாரில் ஏராளமான ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அத்தகைய நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும், பொது கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஜவஹர் பஜார் சாலையில் உள்ள, காமராஜ் சிலை முதல் மாரியம்மன் கோவில் வரை, 2 கிலோ மீட்டர் துாரம் பொது கழிப்பிட வசதி இல்லை.
கரூர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள, கட்டண கழிப்பிடமும் சில நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. இதனால், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்றால், ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ள, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குதான், பொது மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இல்லையென்றால், கரூர் தாலுகா அலுவலகத்தில் ஒதுக்குபுறமாக உள்ள திறந்த வெளிப்பகுதியில் பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே, பொதுமக்களுக்கு வசதியாக கரூர் தாலுகா அலுவலகத்தில், பொது கழிப்பிடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.