ADDED : ஜூன் 21, 2025 01:04 AM
கரூர், கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும், தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், வழக்கறிஞர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும், போலி வழக்கறிஞர்கள் மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன், கரூர் வழக்கறிஞர்கள் சங்க செயலா ளர் நல்லுசாமி உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவிடம், கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்தனர்.
* குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் லாலாபேட்டை சரவணன், இணை செயலாளர் தரகம்பட்டி ராஜகோபால், மூத்த வழக்கறிஞர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.