ADDED : ஜூன் 24, 2026 04:57 AM

கரூர்:மாயனுார்
ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை
தீர்க்கும் வகையில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என,
அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம்,
மாயனுார் வழியாக, சென்னை, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு
நாள்தோறும், 20க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள்
சென்று வருகின்றன. குறிப்பாக, கரூர்- சேலம் இடையே கடந்த, 2013ல் புதிய
ரயில்வே பாதை அமைக்கப்பட்டு சேவை துவங்கிய பிறகு, புதிதாக ரயில்கள்
இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாயனுார் காவிரி
யாற்றின்
குறுக்கே, கரூர் மற்றும் திருச்சி மாவட்டம், சீத்தப்பட்டி பகுதிக்கு
செல்ல உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்லும்
பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களும், மாயனுார் ரயில்வே கேட் வழியாகத் தான்
செல்ல வேண்டும்.
நாள்தோறும் அதிகளவில் மாயனுார் வழியாக ரயில்கள்
செல்வதால், மாயனுார் காவிரியாற்று பகுதி - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
இடையே அமைக்கப்பட்டுள்ள கேட், ரயில் வருகைக்காக அடிக்கடி
மூடப்படுகிறது. இதனால், அப்பகுதியில் நீண்ட வரிசையில் பஸ், லாரி
உள்ளிட்ட வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.
இந்நிலையில்,
மாயனுார் ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகிறது. அதை சீரமைக்க, ரயில்வே
கேட் பல மணி நேரம் மூடப்படுகிறது. இதனால், வெளியூர் மற்றும் உள்ளூர்
பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து
மாயனுார் பகுதியினர் கூறியதாவது: கரூர் அருகே, மாயனுார் ரயில்வே கேட்
மிகவும் பழமையானது. மாயனுார் கதவணை, அம்மா பூங்கா, செல்லாண்டியம்மன்
கோவில் மற்றும் திருச்சி மாவட்டம், சீத்தப்பட்டி பகுதிகளுக்கு செல்ல
மாயனுார் ரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டும். ரயில் வருகைக்காக, கேட்
அடிக்கடி மூடப்படுவதால், எளிதாக செல்ல முடியவில்லை. மேலும், ரயில்வே
கேட் அடிக்கடி பழுதாகிறது. அப்போது, கேட் மூடப்படுவதால், நடந்து
செல்கிறவர்கள் ரயில்வே பாதையை கடந்து செல்கின்றனர். இதனால், விபத்து
ஏற்படு
கிறது. மாயனுார் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
ஆனால்,
மத்திய ரயில்வே துறையிடம் அனுமதி பெற வேண்டும் என, மாநில அரசு
அதிகாரிகளும், ரயில்வே பாதையை தாண்டி இருபக்கமும், இணைப்பு சாலை
அமைக்க மாநில அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என, ரயில்வே அதிகாரிகளும் கூறி
வருகின்றனர்.
இதனால், மாயனுார் ரயில்வே கேட் பகுதியில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி
தாமதம் ஆகிறது. இதனால், மாயனுார் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம
பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். விரைவில்,
உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள்
தெரிவித்தனர்.
