/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ள நிவாரண நிதியை திருப்பி அளிக்க மேயர் முயற்சி; பணியாளர்கள் கொந்தளிப்பு
/
வெள்ள நிவாரண நிதியை திருப்பி அளிக்க மேயர் முயற்சி; பணியாளர்கள் கொந்தளிப்பு
வெள்ள நிவாரண நிதியை திருப்பி அளிக்க மேயர் முயற்சி; பணியாளர்கள் கொந்தளிப்பு
வெள்ள நிவாரண நிதியை திருப்பி அளிக்க மேயர் முயற்சி; பணியாளர்கள் கொந்தளிப்பு
ADDED : பிப் 07, 2024 01:16 AM
கரூர்:கரூர் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தின் போது, வெள்ள நிவாரண நிதிக்கு அளித்த பணத்தை திருப்பி அளிக்க மேயர் முற்பட்டதால், பணியாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு உதவியாளராக பணிபுரியும் ராஜசேகரி என்பவரை, நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் சுதா உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் கவிதா, கமிஷனர் சுதா ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொறியாளர் பிரிவை சேர்ந்த ஊழியர் செந்தில், 'ஒரு நாள் ஊதியம், முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், துாத்துக்குடி வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள, மேலும் ஒரு நாள் ஊதியம் மிரட்டி பெற்று கொண்டனர்' என கூறினார்.
இதனால் கோபமடைந்த மேயர் கவிதா, அங்கிருந்த ஊழியர்களிடம், 'நீங்கள் நிவாரண நிதிக்கு அளித்ததை திருப்பி கொடுக்கிறேன்' என கூறி, தன் பேக்கில் இருந்த பணத்தை எடுத்து போராட்டத்தில் அமர்ந்திருந்த பணியாளர்களிடம் நீட்டினார்.
அதை பணியாளர்கள் வாங்க மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பின், மேயர் கவிதா அவர்களிடம் பேசியதாவது:
ஒரு நாள் சம்பளத்தை மிரட்டி வாங்கினார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அதற்காக தான் பேக்கில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தேன்.
துாத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் உதவி செய்ய வேண்டி, அந்தந்த துறை ஊழியர்களிடம் சம்பளத்தை கேட்கும்படி கூறினேன்.
இந்த சம்பளத்தை அளிக்க விருப்பமில்லை என்று கூறியதால் தான், பணத்தை திருப்பி அளித்தேன். வரும் காலத்தில் ஊழியர்களிடம் பணத்தை வாங்கமாட்டேன்.
இவ்வாறு பேசினார்.
அதன்பின், பணியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

