/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
/
காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
ADDED : ஆக 29, 2024 10:36 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில், பட்டா நிலங்களில் நுாதன முறையில் மணல் கொள்ளை நடக்கிறது. விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் கடந்த, 2011-16 ல் அ.தி.மு.க., ஆட்சியில், 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, ஆன்லைன் மூலம், குறிப்பிட்ட குவாரிகளில் மட்டும், மணல் விற்பனை செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, மணல் குவாரிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி கடந்த, 2019ல் மூடப்பட்டன. மணல் தேவைக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் திறக்கப்பட்ட மணல் குவாரிகளும் படிப்படியாக மூடப்பட்டன.
கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதியில் நன்னியூர் புதுார், மலையம்பாளையம் பகுதியில், இரண்டு மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கை காரணமாக, இரண்டு மணல் குவாரிகளும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
ஆனால், கரூர் மாவட்ட காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. லாரிகள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மூலம், இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக, ஆற்றுப்பகுதிகளில் இருந்து, நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளி செல்லப்படுகிறது.
ஆனால், பெயருக்காக மணல் கொள்ளையர்கள் மீது, காவிரியாற்று பகுதிகளான வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை போலீஸ் ஸ்டேஷன்களிலும், அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், க.பரமத்தி, தான்தோன்றிமலை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளிலும், ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மணல் கொள்ளையர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்புலம் உள்ளதால், பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது இல்லை. இந்நிலையில், திருட்டுதனமாக மணல் அள்ளும் வகையில், ஆற்றுப் பகுதியின் கரை யோரத்தில் உள்ள பட்டா நிலங்கள் மீது, மணல் கொள்ளையர்களின் பார்வை விழுந்து ள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்படாததால், காவிரியாற்று பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. நடப்பாண்டு கடந்த ஜூலை மாதம், காவிரியாற்றில், 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வரை சென்றது. இதனால், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் மணல் அதிகளவில் தேங்கியுள்ளன.
அந்த நிலத்தை, ஒப்பந்த அடிப்படையில், ஒரு தொகை நிர்ணயம் செய்து, மணல் அள்ளப்படுகிறது. அதை, அரசு துறை அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வது இல்லை. இதனால், விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் குறைவதால், தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.