/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.பி., ஜோதிமணிக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது
/
எம்.பி., ஜோதிமணிக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது
ADDED : பிப் 13, 2024 12:24 PM
கரூர்: ''கரூர் லோக்சபா தொகுதியில், எம்.பி., ஜோதிமணிக்கு மீண்டும்
போட்டியிட சீட் வழங்க கூடாது,'' என, முன்னாள் மாவட்ட தலைவர் பாங்க்
சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலர் சேகர் தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் பாங்க் சுப்பிரமணியம் பேசியதாவது:
கடந்த, 2019ல், கரூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி, கட்சிக்காரர்களை மதித்தது இல்லை. அவர் சிபாரிசில் நியமிக்கப்பட்ட மாவட்ட காங்., தலைவர் சின்னசாமியும் ஒதுங்கி விட்டார்.
பல நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டனர். கன்னியாகுமரியில் நடந்த ராகுல் நடை பயணத்தின் போது, விருந்தினர்களை உபசரிக்கும் பொறுப்பு ஜோதிமணிக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் யாரையும் மதிக்கவில்லை.
சமீபத்தில் மாநில காங்., தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் ஜோதிமணி பேசினார். ஜோதிமணி தன்னை, ராகுலுக்கு இணையான தலைவர் போல நினைத்து கொண்டிருக்கிறார்.
மேலும், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, கூட்டணி கட்சியான, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, சீட் பங்கீடு கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், ஜோதிமணி தகராறு செய்து வெளியேறினார். கரூர் லோக்சபா தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது. இது தொடர்பான தீர்மானத்தை, அகில இந்திய தலைமைக்கும், மாநில தலைமைக்கும் அனுப்ப உள்ளோம். கரூர் தொகுதி மீண்டும் காங்., கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில், வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், இளைஞர் அணி தலைவர் கீர்த்தன், மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சுளா, நிர்வாகிகள் செந்தில் குமார், சசிகுமார், காமராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ரத்தத்தில் எழுதிய கடிதம்
கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணிக்கு சீட் வழங்கக் கூடாது என, மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்., கட்சி துணைத் தலைவர் செந்தில் குமார் ரத்தத்தில் எழுதிய கடிதம், மாவட்ட முன்னாள் காங்., தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தடபுடல் விருந்து
காங்., எம்.பி., ஜோதிமணிக்கு எதிராக நடந்த கூட்டத்தில், காங்., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் சாதம், சாம்பார், புளி குழம்பு, மிளகு ரசம், தயிர், கூட்டு, பொறியல், அப்பளம், இஞ்சி ஊறுகாய், வடை மற்றும் பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.